சேலம் மாவட்டம் கம்மாளப்பட்டி அடுத்த ஜல்லூத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி(52). இவர் அதே பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார்.
பழனிசாமி விவசாயம் செய்துவரும் நிலம் பூர்வீக சொத்து என்பதால் அவரின் உடன் பிறந்த சகோதரர் அண்ணாமலை என்பவரும் அவருடன் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு அண்ணாமலை மொத்தமுள்ள பூர்வீக சொத்தான 4.48 ஏக்கர் நிலத்தையும் வேறு நபருக்கு விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை எதிர்த்து பழனிசாமி சேலம் நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இதனையடுத்து சென்ற ஜூலை 15 ஆம் தேதி, தும்பல்பட்டி திமுக பஞ்சாயத்து தலைவர் மணிகண்டன், பழனிசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவரிடம் அத்துமீறி நடந்துள்ளார்.
இதனையடுத்து உயிருக்கு பயந்த பழனிசாமி தனது மனைவி, உறவினர்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை20) கோரிக்கை மனு அளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த விவசாயி பழனிசாமியின் மனைவி விஜயராணி கூறுகையில்," திடீரென்று வீட்டுக்குள் நுழைந்து எங்களை அடித்து துன்புறுத்தி, நிலத்தையும் வீட்டையும் காலி செய்ய வேண்டும் என்று மணிகண்டன் கொலை மிரட்டல் விடுத்தார்.
அவர்களிடமிருந்து எங்களை காப்பாற்ற வேண்டும். ஏழை விவசாயியான எங்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், திமுக பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.