சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்( 38 ).விவசாயியான இவர் தமது தோட்டத்தில் விளைவிக்கக்கூடிய கரும்பு, விவசாய பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக சேலத்தில் உள்ள பிரபல பாரத் பென்ஸ் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் மதிப்புடைய சரக்கு வாகனத்தை(14x14) மாதத் தவணையில் வாங்கியுள்ளார்.
ஆனால் அந்த வாகனம் மாதத்தில் மூன்று முறைக்கு மேல் அடிக்கடி பழுதாகி பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாக, அவர் வாகன உற்பத்தி, விற்பனை நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்தார். மேலும் வாகனத்தை சர்வீஸ் செய்வதற்காக பலமுறை நிறுவனத்திற்கு வந்தபோதிலும் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் கண்டுகொள்வதில்லை எனவும், சரியாக வாகனத்தை சர்வீஸ் செய்து கொடுக்கவில்லை எனவும் புகார் தெரிவித்த தன்னை விற்பனை நிறுவனம் அவமானப்படுத்தியதாக வேதனை தெரிவிக்கிறார்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இன்று தனது உறவினர்களுடன் வாகனத்தை கொண்டுவந்து, நிறுவனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நிறுவனத்தினர் காவல் துறையை வரவழைத்து தங்களை அடக்கி ஒடுக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர் தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே மறியல் போராட்டம் குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பாதிக்கப்பட்ட விவசாயிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவு ஏற்படுத்துமாறு வாகன நிறுவனத்தினரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:பொன்னேரியில் பரபரப்பு: ரவுடிகள் தலையில் கல்லைப்போட்டு கொலை