சேலம்: ஓமலூரில் ஒன்றிய பேரூர் நகர அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (அக்.24) ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் அதிமுக முகவர்களை விரைந்து நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்திய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
பாஜகவில் இருந்து விலகிய பின், ரொம்ப விமர்சிக்கும் மு.க.ஸ்டாலின்: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலின் பேசியபோது என்னைப் பற்றி பல்வேறு விசர்சனங்களை செய்துள்ளார். திமுக கூட்டத்தில் அவர்களது கட்சியை வளர்ப்பது குறித்து பேசாமல் 'அதிமுக' குறித்தும் என்னை குறித்தும் ஸ்டாலின் பேசியிருக்கிறார். 'பொய் பழனிசாமி' என்று விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது. எப்போதும் பொய் தகவலை நான் கூறியதில்லை. பாஜகவில் இருந்து விலகிய பின், என்னை அதிகமாக விமர்சித்து வருகிறார். அதிலிருந்து அவர்களிடம் அச்சம் தெரிவதை பார்க்க முடிகிறது. இஸ்லாமிய மக்கள் என்னை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருவதை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை' என சாடினார்.
'அத்திக்கடவு அவினாசி திட்டம் (Avinashi Athikadavu project) 90 விழுக்காடு நிறைவடைந்தன. இது முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியிலிருந்து செய்யப்பட்ட திட்டம். அதை திமுக அரசு நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளதால் கடுமையான பாதிப்பு விவசாயிகளுக்கே. சேலத்தில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் மூலம் 100 ஏரிகள் நிரப்பும் திட்டம் சுமார் ரூ.562 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. இதனால் ஆறுகள், ஏரிகள் மேட்டூர் உபரி நீரால் நிரம்பின. ஆனால், அந்த திட்டத்தையும் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
பச்சைப் பொய் பேசிய மு.க.ஸ்டாலின்; ஈபிஎஸ் சாடல்: கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 100 விழுக்காடு நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் பச்சைப் பொய் பேசி வருகிறார். குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்று கூறினார். அதை வழங்கவில்லை. 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார். அதையும் நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து 'நீட் தேர்வு' (NEET Exam) ரத்து ஆகத்தான் என்றனர். அதையும் செய்யவில்லை.
நீட் விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றாதீர்கள்: இப்படி அவர்கள் செய்யாத நிறைவேற்றாத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர். எந்த புதிய திட்டங்களும் கொண்டுவராமல் இரண்டரை ஆண்டுகாலத்தில் இரண்டரை லட்சம் கோடி கடன் பெற்றுள்ளனர். அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்று கூறிவிட்டு, தற்பொழுது சில பேருந்தில் மட்டுமே பயணம் செய்ய முடியும் அவலநிலை உள்ளது. நீட் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் மாணவர்களை ஏமாற்ற வேண்டாம், தேர்தலுக்காக மக்களிடம் பொய்க் கூற வேண்டாம்' என்று விமர்சித்தார்.
மக்களை திசை திருப்பவே, திமுக 'கையெழுத்து இயக்கம்': மேலும் தொடர்ந்து பேசிய அவர், 'அதிமுக ஆட்சியின்போது தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் முடியும் தருவாயில் இருந்தன. அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது அந்த திட்டங்களை தான் முடிவுற்றப் பணிகளை தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து வருகிறார். திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதை திசை திருப்பவே நீட் எதிர்ப்பு 'கையெழுத்து இயக்கம்' நடத்தி உள்ளது' என்றார்.
சர்ச்சையான ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு: பதில் கூறவேண்டியது அறிஞர்களே: அப்போது 'ஆரியமும் திராவிடமும் இல்லை' என ஆளுநர் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஈபிஎஸ், 'நான் அந்த அளவுக்கு படித்தவன் அல்ல; நீண்ட ஆய்வு செய்ய வேண்டியவை. இப்போது அதனை ஆய்வு செய்யவோ? பதில் கூறவோ? நேரம் இல்லை. அறிஞர்கள் கூற வேண்டிய கேள்விக்கான பதிலை நான் கூறினால், அது தவறாகப் போய்விடும் எனக் கூறினார். மேலும் பேசிய அவர்,' திமுகவிற்கும் கொள்கைக்கும் சம்மந்தமே இல்லை. கருணாநிதி காலத்தில் இருந்தே குடும்பத்தின் வளர்ச்சியும், பதவியுமே முக்கிய நோக்கமாக உள்ளது. கொள்ளையடித்த பணத்தைப் பாதுகாக்கவே 'இந்தியா' கூட்டணி(INDIA Alliance). அதில் உள்ள 26 கட்சிகளும் ஒருமித்த கருத்து கொண்டவையல்ல. அக்கூட்டணி நிலைக்குமா? என்பதில் சந்தேகமானது' என்றார்.
இதையும் படிங்க: "ஆளுநர் மாளிகையே அடக்கிடு வாயை" - டி.ஆர்.பாலு காட்டமான அறிக்கை