சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி பகுதியிலுள்ள சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரமாக இருசக்கர வாகனம் ஒன்று நின்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சாலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இதையடுத்து ஆத்தூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இளைஞரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக காவல் துறை மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞர் கள்ளக்குறிச்சி மாவட்டம் பூக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பதும், அவர் பொறியியல் பட்டதாரி என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் பெற்றோரை இழந்த தமிழ்ச்செல்வன், அரசு வேலைக்காகப் போட்டித்தேர்வுப் பயிற்சியைச் சேலத்தில் உள்ள தனியார் பயிற்சி நிலையத்தில் படித்து வந்ததும் தெரியவந்துள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிப்போன காரணத்தினால், மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை