சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்த தம்பதியினர் மன்னாதன்(57) - கோவிந்தம்மாள் (55) . இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
மன்னாதன் நங்கவள்ளி மின்வட்டம் பெரிய சோரகையில், மின் பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று மாலை பெரிய சோரகையில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதாக வந்த புகாரையடுத்து சரிசெய்வதற்காக அப்பகுதிக்கு மன்னாதன் விரைந்துள்ளார்.
பழுது ஏற்பட்ட மின்மாற்றி மீது ஏறிய அவர், மின்சாரத்தை துண்டிக்காமலே பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மன்னாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து மின்மாற்றியிலே தொங்கியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நங்கவள்ளி மின்வாரிய ஊழியர்கள், அவரின் சடலத்தை கீழே இறக்கினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.