இந்தியாவின் முதல் கல்வித்துறை அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் நினைவு தினம் நாடு முழுவதும் தேசிய கல்வி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கல்விக்காக அவர் ஆற்றிய பணியையும், தளரா உழைப்பையும் கௌரவிக்கும் விதமாக இன்று சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தேசிய கல்வி நாள் கொண்டாடப்பட்டது.
இதில், கல்வியாளர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், அபுல் கலாம் ஆசாத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிந்தனைகள் எல்லா பள்ளிகளுக்கும் முத்துக்கள் பத்து என்ற தலைப்பில் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது.
யார் இந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத்?
இந்தியா பிளவு படுவதை தடுக்க தீவிரமாக பாடுபட்டவர் அபுல் கலாம் ஆசாத். இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக குரல் கொடுத்து பல முறை சிறை சென்றுள்ளார்.
இவர் கல்வி அமைச்சராக இருந்தபோது, 14 வயது நிரம்பிய அனைவருக்கும் கட்டாய கல்வித் திட்டத்தை கொண்டு வந்தார். 1951ஆம் ஆண்டு ஐஐடி, 1953ஆம் ஆண்டு யுஜிசி ஆகிய நிறுவனங்களை நிறுவி, இந்திய தொழில்நுட்ப கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டார்.
![உறுதிமொழி ஏற்ற கல்வியாளர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-slm-01-national-education-day-script-photo-visual-tn10031_11112020130440_1111f_00822_1094.jpg)
இந்திய அரசு, பல சாதனைகளை புரிந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் பெயரில் டெல்லியில் மருத்துவக் கல்லூரி நிறுவியதுடன், 1992ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பித்தது. இவரது பெயரில் தபால் தலையும் வெளியிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தின் தலைவர் செல்வம், கல்வியாளர்கள் பீட்டர் ஆனந்த், முனைவர் தனம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உடனடி பணி நியமன ஆணை : நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முதலமைச்சர்!