சேலம்: மேட்டூர் உபரி நீர் திட்டப்பணிகளை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். சேலம் வெள்ளாளபுரம் ஏரி அருகே நடைபெற்று வரும் நீர் உந்து நிலைய கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு விரைவில் முடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சேலம் மாவட்டம் எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100 ஏரியை நிரப்பும் நோக்கத்தில் ரூபாய் 565 கோடி மதிப்பீட்டில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகளை துவக்கி துவக்கிவைத்தேன்.
ஆனால் திமுகவினர் ஆட்சிக்கு வந்து 14 மாத காலம் ஆகிறது. இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் அதனை முழு மூச்சுடன் நிறைவேற்றி தற்போது மேட்டூரில் இருந்து வெளியேறும் உபரி நீரை 100 ஏரிகளிலும் நிரப்பியிருக்கலாம்.
அதிமுக காலத்தில் துவக்கி வைத்த காரணத்தினால் திமுகவினர் திட்டத்தினை விரைந்து நிறைவேற்ற மனமில்லாமல் காலம் கடத்துவதாக குற்றம் சாட்டிய அவர், அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. மின் கட்டணம் உயர்த்தவில்லை. ஆனால் திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வஞ்சித்து விட்டது என கூறினார்.
ஆன்லைன் ரம்மி சூதாட்டம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தடை செய்யப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அந்த நிறுவனங்கள் நீதிமன்றத்துக்கு சென்று மீண்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை கொண்டு வந்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மனம் இருந்திருந்தால் தமிழ்நாடு அரசு அதனை தடுத்திருக்கலாம். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்க்கு பதிலாக மக்களிடம் கருத்து கேட்பதாக கூறி காலத்தை நீட்டி வருவதாக குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. காவல்துறை நினைத்தால் போதை பொருட்களை நிச்சயமாக தடுக்கலாம் ஆனால் செயலற்ற முதலமைச்சர் இருப்பதால் போதைப் பொருட்கள் பயன்பாட்டினை தடுக்க முடியவில்லை என்றார்.
கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை வைப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தற்போதைய நிதி நிலைமையைப் பொறுத்து அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து கருத்து தெரிவித்தால் வேண்டுமென்றே தேவையில்லாத விமர்சனம் வரும், பொருளாதார நிதி நிலையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘வெள்ள பாதிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை’ - ஈபிஎஸ் குற்றச்சாட்டு