கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் ஊரடங்கினால் உணவுப் பஞ்சத்தில் சிக்கிடாமல் இருக்க ரேஷன் கடைகள் மூலம் தங்கு தடையின்றி அரிசி விநியோகத்தை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இந்நிலையில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் அரிசியை சிலர் வெளி மார்க்கெட்டுகளில் கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பிலும், சமூக ஆர்வலர்கள் சார்பிலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தப் புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இதனால், அதிருப்தியடைந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று (ஆகஸ்ட் 10) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கக்கோரி போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின்போது, மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் கணேசன், "சேலம் மாநகரப் பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் அரிசி, மூட்டை மூட்டையாக வெளி நபர்களால் கடத்தப்பட்டு வெளிமாவட்டங்களில் கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக எங்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறோம். எங்களது கோரிக்கையை மனுவாக ஆட்சியரிடம் அளித்திருக்கிறோம். ஆனால், உணவுத் துறை அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் உடனே இவ்விவகாரத்தில் தலையிட்டு ரேஷன் அரிசி கடத்தலைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மூதாட்டியின் மரணத்திற்கு காரணமான சேலம் டவுன் போலீஸ்?