நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தற்பொழுது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் 100 ரூபாய்க்கு மேலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் நாளுக்கு நாள் விலைவாசியும் அதிகரித்துவருவதால், மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவதில் பெரும் நெருக்கடியைச் சந்தித்துவருகின்றனர்.
இதனை அடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் கணேசன் தலைமையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, இருசக்கர வாகனங்களை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். உடனடியாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கையும்விடுக்கப்பட்டது.
மேலும் இருசக்கர வாகனங்களை தோள் மீது சுமந்து ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்தனர். அப்பொழுது காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி இருசக்கர வாகனத்தைப் பறிமுதல்செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.