பாகிஸ்தான், வங்கதேசம் , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வரும் சிறுபான்மையின மக்களுக்கு குடியுரிமை அளிக்கும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது, இந்த சட்டத்திருத்த நகலை எரித்தும், மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதையடுத்து, காவல் துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்ய முற்பட்டபோது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர், அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை எதிர்ப்போம்!