சேலம்: எருமாபாளையம் பகுதியில் மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ இன்று (மார்ச் 5) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய துரை வைகோ, “தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், இந்தி பேசிய காரணத்திற்காக பீகாரைச் சேர்ந்த 15 இளைஞர்கள் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் பொய்யான வதந்தியை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதனால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பை குறிப்பிடுகிறேன்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே கரோனா காலத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. கடந்த ஒரு ஆண்டில் மீண்டும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சியால் பல லட்சம் கோடி மதிப்பீட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு வாய்ப்பானது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் உற்பத்தி தொழிற்சாலைகள், கட்டுமானத் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் 50 முதல் 75 சதவீதம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த தொழிற்சாலைகளும் முடங்குவதற்கு காரணமாக இருக்கும். தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் என்று தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்களால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டு இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். உடல் உழைப்பு தருகின்ற தொழில்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலில் தமிழ்நாட்டு இளைஞர்கள் யாரும் ஈடுபட விரும்புவதில்லை. இதை விட்டு உயர்தர வேலைகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் சென்று விட்டனர். எனவே, தமிழ்நாட்டில் உண்டான ஆட்கள் பற்றாக்குறையால், தமிழ்நாட்டு தொழிற்சாலை முதலாளிகள் வடமாநிலத்தவர்களை வைத்து வேலை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டு தொழிற்சாலைகளில் நிறைய இடங்களில் ஆட்கள் தேவை என்று போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. வடமாநில இளைஞர்களால்தான், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்ற தவறான பிம்பத்தை உருவாக்குகிறார்கள். உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி பிரசாத் உமரோ, பாஸ்கர் மற்றும் வாட்டர்போஸ்ட் உள்ளிட்ட பத்திரிகை தவறான வதந்திகளைப் பரப்பி வருகிறது.
பிரசாத் உமரோவிற்கு இது முதல் முறை அல்ல. ஏற்கனவே பலமுறை தவறான வதந்திகளைத் தொடர்ந்து பரப்பியுள்ளார். இவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி கூறும் நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தமிழர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்கள் மீது வன்முறையும், தாக்குதலும் நடக்க பல வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, பொருளாதாரத்தை முடக்கப் பார்க்கிறார்கள்.
தமிழர்கள் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் இது உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சில நபர்கள் மீது தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒரு படித்த இளைஞர் மற்றும் முன்னாள் காவல் அதிகாரி. இது போன்ற கருத்துகள் சொல்வது தமிழ்நாட்டிற்கு துரதிர்ஷ்டமான ஒன்று. தமிழ்நாடு பாஜக தலைவர் தொடர்ந்து பல வதந்திகளைப் பரப்பி வருகிறார்.
இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் மீண்டும் புதிய வதந்திகளை ஏதாவது பரப்புவார்கள். கரோனா காலத்தில் இருந்தது போன்று வடமாநிலத் தொழிலாளர்கள், இந்த பிரச்னையால் புறப்பட்டுச் சொந்த மாநிலங்களுக்குச் சென்றால், தமிழ்நாட்டின் பொருளாதாரம் முடங்கிவிடும். தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றச் சம்பவங்களில் வடமாநிலத்தில் இருந்து வரும் வாலிபர்களில் சிலர் ஈடுபடுகிறார்கள். 100 சதவீதத்தில் 5 சதவீதம் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுகிறார்கள். அதிகமாக ஈடுபடவில்லை.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மீதமுள்ள குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு முறையாக வழங்கவில்லை. 29,000 கோடி ரூபாய் கடந்தாண்டை விட இந்த ஆண்டு குறைக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைவாய்ப்புக்கு பதில் 20 நாள் வேலை வாய்ப்புத்திட்டம் என்று அறிவித்து விட வேண்டும். தமிழ்நாட்டிற்கு கலெக்டர் வேலைக்கு வடமாநிலத் தொழிலாளர்கள் வரவில்லை.
365 நாட்கள் கடுமையாக உடல் உழைப்பை கொடுத்து வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதை தவறாகக் கூற முடியாது. மதுவிலக்குக்கு எதிரான இயக்கம்தான், மதிமுக. வைகோவின் தாயார் 100 வயதில் மதுவிற்கு எதிராகப் போராடி உயிரிழந்தார். எனவே ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் மதுபானக் கடைகள் இருக்கக்கூடாது என்று மக்கள் முடிவு செய்ய வேண்டும். மக்கள் நினைத்தால் மதுக் கடைகளை முழுமையாக மூடலாம். அரசுக்கும் கடமை உள்ளது.
அந்தந்த கிராமப் பஞ்சாயத்துகளில் பெண்கள் தெரிவித்து, மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுமையாக அரசை மட்டும் குறை சொல்ல முடியாது. மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற மாற்றம் மக்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு ஆரம்பித்தால் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் மாறுவார்கள்.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் வரவேற்கக் கூடியது. இந்தியாவில் உள்ள அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு வரும் பட்சத்தில், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த பீகார் ஆய்வுக் குழுவினர்!