சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் சின்ராஜ் (30). இவர், மே மாதம் 20ஆம் தேதி, அவரின் கீழ் முதுகு பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட நிலையிலேயே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உடனடியாக சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தனபால், உறைவிட மருத்துவர் டாக்டர் ராணி ஆகியோரின் அறிவுரைப்படி நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சங்கர், டாக்டர் பிரகதீஸ், குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி, பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கண்ணன், மயக்கவியல் மருத்துவர் நாகராஜ் அடங்கிய குழுவினர் 4 மணி நேரம் போராடி முதுகெலும்பில் குத்தப்பட்டு இருந்த கூர்மையான ஆயுதத்தை வெற்றிகரமாக அகற்றினர் .
சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் பேட்டி தொடர்ந்து நோயாளி சின்ராஜ் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு தற்போது குணம் அடைந்து உள்ளார்.இதுதொடர்பாக சேலம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் கூறுகையில்," மிகவும் ஆபத்தான நிலையில் சின்ராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு உரிய பரிசோதனைகள் உடனுக்குடன் செய்யப்பட்டு சில மணி நேரங்களில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனை நமது அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று தெரிவிக்கப்பட்ட அறுவை சிகிச்சையை அரசு மருத்துவமனையில் இலவசமாக உரிய நேரத்தில் பாதுகாப்பான முறையில் செய்துள்ளனர்.
நோயாளி சின்ராஜ் தற்போது நலமுடன் நடமாடுகிறார். இதனை பெருமையோடு அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது. இது போன்ற அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சைகள், கரோனோ ஊரடங்கு காலத்திலும் தடைபடாமல் சேலம் மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.
மேலும் ஈரோடு நாமக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்புகின்றனர்” என்றார்.
மேலும், கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கூறும்போது, “சேலம் அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் கரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் 196 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் மருத்துவருக்கு கரோனா தொற்று!