சேலம்: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக திமுக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திமுக எம்பி கனிமொழி, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஆகியோர் முதல்கட்டமாக 10 நாள் தேர்தல் பரப்புரையை முன்னெடுத்துள்ளார்.
இதையடுத்து, சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை தாங்கினார். இது தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
சேலத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கனிமொழி, சேலம் மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடம் கலந்துரையாடினார். மேலும் அவர்களது கோரிக்கைகளையும், தேவைகளையும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பேசிய கனிமொழி, "திமுக தனது ஆட்சிகாலத்தில் மகளிருக்கும், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும், முன்னுரிமை அளித்து கௌரவித்தது. ஆனால் தற்போதுள்ள மத்திய, மாநில அரசுகள் எந்தவித சலுகைகளையும் வழங்குவதில்லை. மாறாக சுமையை அதிகரித்திருக்கிறது அழிவுப்பாதைக்கு வழிநடத்திச் செல்கிறது.
இவர்களது ஆட்சி காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்கள் இதற்கு சாட்சி என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இவர்களது ஆட்சிக் காலத்தில் தொழில்துறையிலும் வளர்ச்சி ஏற்படவில்லை, வேலைவாய்ப்பும் உருவாக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். தேர்தல் பரப்புரையில் திமுகவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது" எனவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ”முதலமைச்சர் தொகுதியில் பரப்புரையைத் தொடங்குவதில் உள்நோக்கம் இல்லை” - கனிமொழி