சேலம்: சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சித் தலைவர் கவிதா, வாக்களித்த மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தராமல், 80 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எந்தவித பணிகளையும் மேற்கொள்ளாத திமுக பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, திமுக கவுன்சிலர்கள் உள்பட 15-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் இன்று(மே.9) சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்கள், "சேலம் மாவட்டம், கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 கவுன்சிலர்கள் உள்ளனர். அவர்களில் திமுக 13, அதிமுக 3, காங்கிரஸ் 2 என மொத்தம் 18 பேர் உள்ளனர். இதில் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த கவிதா என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு, கடந்த இரண்டு ஆண்டு காலத்தில், ஐந்து முறை மட்டுமே தம்மம்பட்டி பேரூராட்சியில் உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டங்களிலும் எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல ஒவ்வொரு வார்டுக்கும், திட்டங்களை நிறைவேற்ற எந்த ஒரு நிதியும் ஒதுக்கவில்லை. இதனால் மக்களுக்கு அடிப்படை வசதி கூட செய்து தர முடியாத நிலை உள்ளது. தலைவர் கவிதா, ஏற்கனவே பேரூராட்சியில் பல்வேறு பணிகள் செய்ததாகக் கூறி 80 லட்சம் ரூபாயை முறைகேடு செய்துள்ளார்.
மேலும், கவிதா தலைவர் இருக்கையில் அமர்வதில்லை. அவரின் அதிகாரத்தை அவரின் கணவரும், தம்மம்பட்டி திமுக நகரச்செயலாளர் மற்றும் நான்காவது வார்டு கவுன்சிலருமான 'டர்னர்' ராஜா, தலைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு அனைவரையும் மிரட்டுகிறார்.
வார்டு மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை வைத்தால், கவிதாவின் கணவர் ராஜா தலைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு செய்து தர முடியாது என்று அலட்சியமாகப் பேசுகிறார். திமுக பெண் கவுன்சிலர்களை சாதி பெயரைச் சொல்லி கேவலமாகப் பேசுகிறார்.
தன்னை மாவட்டச் செயலாளர், அமைச்சர், திமுக மேலிடமும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார். இதனால் வாக்களித்த மக்களைச் சந்திக்க முடியாமல் திமுக கவுன்சிலர்கள் உள்பட அனைத்து கவுன்சிலர்களும் வேதனையுடன் உள்ளோம்.
பேரூராட்சித் தலைவர் கவிதா மற்றும் அவரது கணவர் மீது பல முறை முறைகேடு புகார் அளிக்கப்பட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தம்மம்பட்டி பேரூராட்சி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டமும் நடத்தினோம், ஆனால் பலனில்லை. எனவே, மக்களுக்கு சேவை செய்ய முன்வராத தலைவர் கவிதா மற்றும் அவரது கணவர் ராஜா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி, ஆட்சியரை சந்தித்து புகார் அளித்துள்ளோம்.
இதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை, நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லையெனில், முதலமைச்சர் முன்னிலையில் 15 உறுப்பினர்களும் ராஜினமா கடிதத்தை வழங்குவோம்" என்று கூறினர்.
இதையும் படிங்க: "மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை" - கரூரில் திமுக கவுன்சிலர் திடீர் ராஜினாமா!