சேலம்: பள்ளியில் குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்ததாக புகார் தெரிவித்த மாணவியர் மீது நடவடிக்கை எடுத்த தலைமை ஆசிரியையைக் கண்டித்து 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் குடிநீரில் புழு இருந்ததாக மாணவிகள் பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்வாணியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அதற்கு தலைமை ஆசிரியை வீட்டிலிருந்து எடுத்து வந்த தண்ணீரில் புழு இருந்திருக்கும் என்று கூறி, புகார் தெரிவித்த மாணவிகள் இரண்டு பேரை முட்டி போட வைத்து ஆறு மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.
இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட கல்வி அதிகாரி இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு
வரும் நிலையில், இன்று காலை பள்ளியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் மோசமான கழிவறை, எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என்று கூறி பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர்.
மாணவிகள் தொடர்ந்து பள்ளி மீதும், ஆசிரியர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக இந்த பள்ளியில் குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாக தலைமை ஆசிரியர் செயல்படுவதாகவும், பள்ளி மாணவிகளை அருவருக்கத்தக்க அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி விலங்குகளை போல் தலைமை ஆசிரியர் நடத்துவதாகவும் குற்றச்சாட்டை தெரிவித்தனர்.
பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபடும் தகவல் அறிந்து அங்கு வந்த சேலம் மாநகர காவல் துறையினர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுதும் மாணவிகள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து தங்களின் கோரிக்கையை பதாகைகளாக ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவிகளை கலைந்து செல்ல வைக்க பல்வேறு முயற்சிகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்டனர். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பள்ளி மாணவிகளிடம் சேலம் திமுக 31-வது வார்டு செயலாளர் சையத் இப்ராஹிம் பள்ளிக்குள் நுழைந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாணவிகளை கலைந்து செல்லும்படியும், போராட்டத்தை கைவிடும் படியும் கூறி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், அரசு பள்ளியில் திமுக வார்டு நிர்வாகி நுழைந்து பேச்சு வார்த்தை நடத்திய சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பள்ளி மாணவிகள் போராட்டம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக திமுக வார்டு செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தியதால் பள்ளி வளாகத்தில் பதற்றம் நிலவியது.