சேலம்: தீபாவளி பண்டிகைக்காக தயாரிக்கப்படும் இனிப்புகளைத் தரமாக தயாரிக்க வேண்டும் எனவும், அதிக நிறம் சேர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு நிறுவனமாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவனமாக இருந்தாலும் சரி, தரமான இனிப்புகளை தயாரிக்கா விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் அதற்கான இனிப்பு தயாரிக்க தேவையான பணிகளை இனிப்பு தயாரிப்பாளர்கள் பரபரப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் இன்று (நவ.1) தீபாவளி இனிப்பு தயாரிப்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஸ்வீட் கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இனிப்பு தயாரிப்பது குறித்தும் பேக்கிங் செய்யும் முறை குறித்தும் கூட்டத்தில் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பேக்கிங்கில் என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டன.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன், 'இனிப்புகளை தயாரிக்கும் உரிமையாளர்கள் தரமானதாகவும் சுகாதாரமாகவும் தயாரிக்க வேண்டும். அதிக செயற்கை நிறம் சேர்த்து விற்பனைக்கு வைத்து இருப்பதை கண்டறிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இனிப்பு விற்பனை செய்யும் கடைகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்கள் மூலம் மாவட்ட முழுவதும் அதிரடி சோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும், இனிப்பு தயாரித்து விற்பனை செய்யப்படும் பெட்டிகளில் கடையின் பெயர் முகவரி தயாரிக்கப்பட்ட தேதி அனைத்தும் அச்சிட வேண்டும் என்றார். மேலும் செய்தியாளர்கள் அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் தயாரிக்கும் இனிப்புகளுக்கும் இது பொருந்துமா என்று எழுப்பிய கேள்விக்கு, அரசு நிறுவனமாக இருந்தாலும் சரி தனியார் நிறுவனமாக இருந்தாலும் சரி இனிப்பு தயாரிப்பது சுகாதாரம் கடைப்பிடிக்க வேண்டும். தரமற்ற முறையில் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழக வரலாற்றை பறைசாற்றும் சேலம்! 158வது சேலம் தினம் கொண்டாட்டம்!