மாவட்ட ஆட்சியர் அலுவலக உட்பகுதியில் இயங்கிவரும் மாற்றுத்திறனாளிகள் அலுவலக வாயிலில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், உதவி கேட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் தங்களது துறை அலுவலரை சந்திக்க வழியில்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் இயங்கிவருகிறது. இங்கு மாவட்டம் முழுவதிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இங்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு காத்திருக்கும் பகுதி அமைக்கப்பட்டு இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. ஆனால் அலுவலகத்தில் பணியாற்றும் பல்வேறு துறை ஊழியர்கள் தங்களின் இரு சக்கர வாகனங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்பட்ட காத்திருக்கும் பகுதி வழியிலேயே நிறுத்தி செல்கின்றனர்.
இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று துறை சார்ந்த அலுவலர்கள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இருப்பினும் ஊழியர்கள் வாகனங்கள் நிறுத்துவதை வடிக்கையாக வைத்துள்ளனர்.
இதனால் அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் மீது தினமும் மோதிக்கொள்வதும் காயப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அலுவலகத்தின் தரைதளத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: உழவர் சந்தையில் உள்ளூர் விவசாயிகளுக்கும் இடம் ஒதுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு