சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கொத்தாம்பாடி, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நேற்று (அக்.2) கரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட டெஸ்ட் டியூப் குப்பிகள் சாலையில் கிடந்தன.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து , ஆத்தூர் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத் துறை அலுவலர்கள், சாலையில் கிடந்த பத்துக்கும் மேற்பட்ட டெஸ்ட் டியூப் குப்பிகளை ஆத்தூர் சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.
மேலும், இதை யார் சாலையில் வீசி சென்றார்கள் என்பது குறித்து சுகாதாரத் துறை அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று கொத்தாம்பாடி, கல்பகனூர் , செல்லியம்பாளையம் ஆகிய பகுதிகளில் கரோனா சளி தடவல் பரிசோதனை பொதுமக்களுக்கு செய்யப்பட்டது தெரிய வந்தது.
அந்தச் சோதனையை தற்காலிக பணியாளர்கள் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கவனக்குறைவாக வாகனத்திலிருந்து பரிசோதனைகள் சாலையில் விழுந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஆத்தூர் சுகாதாரத் துறை துணை இயக்குனர் செல்வகுமார், கவனக்குறைவாக இருந்து சாலையில் கரோனா பரிசோதனை குப்பிகளை தவர விட்டுச்சென்ற தற்காலிக பணியாளர்கள் சரவணன், செந்தில் இருவரையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கரோனா இல்லாதவருக்கு கரோனா இருப்பதாக சான்றிதழ் வழங்கிய ஆய்வகத்தை முற்றுகையிட்ட மக்கள்!