கர்நாடகா மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து காணப்படுகிறது.
இதன் எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக சரிந்து வருகிறது.
இருந்தபோதிலும் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்ட பாசன வசதிக்காக திறந்து விடப்படும் நீரின் அளவு, 18 ஆயிரம் கன அடியிலிருந்து 16 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று ஐந்து ஆயிரத்து 616 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஆக.31) மேலும் குறைந்து நான்கு ஆயிரத்து 144 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 800 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையிலிருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்றைய காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர் மட்டம் 90.710 அடியாக இருந்தது. மேட்டூர் அணை பகுதியில் நேற்று இரவு மழை பதிவு 36.4 மில்லி மீட்டர் ஆக பதிவாகி உள்ளது.
பிலிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் அணைக்கு நான்கு ஆயிரத்து 144 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.