மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி ஆகும். காவிரி டெல்டா பாசனத்திற்குத் தொடர்ச்சியாக நீர் திறந்ததால் கடந்த ஒரு வாரமாக அணையின் நீர்மட்டம் 89.77 அடியாக சரிந்தது.
இந்த நிலையில், கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மூன்று நாள்களாக அதிகரித்தது. நேற்று முன்தினம் விநாடிக்கு, 65 ஆயிரம் கனஅடியாக இருந்த அணையின் நீர்வரத்து நேற்று அன்றே 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இதனால் நேற்று அணையின் நீர் மட்டம் 96.870 அடியாகவும் நீர் இருப்பு 60859 டி.எம்.சி.யாகவும் இருந்தது. இந்த நிலையில் இன்று(செப்.24) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98.200 அடியாகவும்; நீர் இருப்பு 62,533 டி.எம்.சி.யாகவும் உள்ளதாகப் பொதுப்பணித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் அணையிலிருந்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக பாசனத்திற்கான 850 கனஅடி நீர் இன்று (செப்.24) காலை முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழையின் தீவிரம் சற்று குறைந்ததால், நீர் வரத்து சரிந்ததால் நேற்று, கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் திறப்பு, 47 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து இன்று காலை நிலவரப்படி 49 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.