சேலம் மாவட்டம் திருவாகவுண்டனூர் அருகே உள்ள சுகுமார் காலனி பகுதியை சேர்ந்த வெள்ளி பட்டறை தொழிலாளி சரவணன். இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அதே பகுதியில் பொது இடத்தை ஆக்கிரமித்து கோயில் மற்றும் வீடு கட்டியுள்ளது தொடர்பாக அதிமுக பிரமுகரான திலகா என்பவரிடம் கேள்வி கேட்டுள்ளார்.
இதில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக சரவணன் மீது காவல் நிலையத்தில், திலகா புகாரும் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் சரவணனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்கு அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து வீடு திரும்பிய சரவணன், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
ஆனால் காவல்துறையினர் புகாரை ஏற்க மறுத்ததால், இறந்த நபரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க:செல்போன் டவர் மீது ஏறி 'குடி'மகன் ரகளை! - காவல் துறை விசாரணை