சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் தெய்வராணி என்பவர் கடந்த 1998ம் ஆண்டு முதல் உதவியாளராக பணியாற்றி வந்தார். பணி நிமித்தமாக இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால் கடந்த 2011ம் ஆண்டு பல்கலைக்கழக நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. பெரியார் பல்கலைக்கழகம் தன் மீது மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து சேலம் தொழிலாளர் நல நீதிமன்றத்தில் தெய்வராணி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கைக் கடந்த 2021ம் ஆண்டு விசாரித்த நீதிமன்றம், தெய்வராணிக்கு, மீண்டும் பணி வழங்கச் சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி பணி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தெய்வராணி, தனக்கு உடனடியாக பணி வழங்கக் கோரி சேலம் தொழிலாளர் நலத்துறை நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (மார்ச் 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, "தெய்வராணிக்கு மீண்டும் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த உத்தரவைப் பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படுத்தவில்லை. இதுபோன்ற செயல் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுகிறது. எனவே சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளரும், தற்போதைய கணினி அறிவியல் துறைத் தலைவருமான தங்கவேலைக் கைது செய்ய உத்தரவிடுகிறேன்" எனக் கூறினார்.
நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளரைக் கைது செய்ய நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Masi Thiruvizha: திருச்செந்தூரில் களைக்கட்டிய மாசித் திருவிழா தேரோட்டம்!