சேலம்: சேலம் மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற இயல்பு கூட்டம் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் பாலச்சந்தர் தலைமையில் இன்று (டிச 26) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் பேசுகையில், "சேலம் மாநகராட்சி உட்பட்ட 60 வார்டுகளிலும் லட்சக்கணக்கான நாய்கள் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.
மேலும், முதியோர் மற்றும் குழந்தைகளைத் தெருக்களில் துரத்திக் கடிப்பது போன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகவே, தெரு நாய்களைப் பிடிக்க விரவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.
அதைத் தொடர்ந்து பேசிய, அதிமுக கவுன்சிலர்களும் இதே கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்தனர். இரண்டு தரப்பினரும் வைத்த கோரிக்கைகளுக்கும் பதிலளித்த மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் கூறுகையில், "சேலம் மாநகராட்சியில் லட்சக்கணக்கில் தெரு நாய்கள் இருப்பதை நானே அறிந்தேன். தெரு நாயினால் எனக்கும் மோசமான அனுபவமும் உள்ளது.
மேலும், தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை மட்டுமே நம்மால் செய்ய முடியும். தெரு நாய்களைக் கொல்லவோ அழிக்கவோ நமக்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது. நாய்களைப் பாதுகாக்க பல்வேறு அமைப்புகள் உள்ளது. தமிழ்நாட்டில் அதிக அளவில் தெரு நாய்கள் உள்ள இடத்தில் சேலம் மாநகராட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது" என்று விளக்கம் அளித்துப் பேசினார்.
இருந்த போதிலும் மாநகராட்சி ஆணையரின் விளக்க உரையை ஏற்க மறுத்த கவுன்சிலர்கள், மீண்டும், மீண்டும் தெரு நாய்கள் குறித்த குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்ததால் மாமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சுனாமி நினைவேந்தல்; சென்னை மெரினாவில் பால் குடம் எடுத்து அனுசரித்த மீனவ மக்கள்!