சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பருவமழையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
அதில், மழையின்போது பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி கட்டிடங்கள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றை கண்டறிந்து தயார் நிலையில் வைத்திருக்கவும், மின்விளக்கு போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும் மற்றும் தேவைப்படும் இடங்களில் ஜெனரேட்டர்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர் தேங்கி நிற்கும் பகுதிகளைக் கண்டறிந்து, அதனை சரி செய்து அவ்விடத்தில், பாதுகாப்பான போக்குவரத்து ஏற்படுத்திடும் வகையில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படும்.
ஒவ்வொரு மண்டலத்திலும் உதவி ஆணையாளர்கள் தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மைப் பணியாளர்களைக் கொண்ட வெள்ள நிவாரண பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நடமாடும் சுகாதாரக் குழுக்களை அமைத்து மழையினால் பாதிப்பு அடையும் பகுதிகளில் எளிதில் சென்றடைவதற்கு ஏதுவாக வாகனங்கள், வயர்லெஸ் வசதிகளுடன் இக்குழுவினர்கள் செயல்படுவார்கள். மாநகராட்சி பகுதிகளிலுள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் போதிய மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டும்.
பருவ மழையின் போது மேற்கொள்ளப்படும் அவசர கால பணிகள் தொய்வின்றி நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்படும். அன்றாடம் மேற்கொள்ளும் பணிகளின் விவரத்தினை தினசரி அறிக்கையாக ஆணையாளருக்கு வழங்கிட வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சேலம் மாவட்டத்தில் 69 பேருக்கு கரோனா சிகிச்சை': மருத்துவக் கல்லூரி முதல்வர்!