சேலம் மாவட்டத்தில் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 30 நபர்கள் கரோனா வைரஸ் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில் 16 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மருத்துவமனையில் கரோனா நோய் சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவரும் தன்னலம் கருதாமல் இரவு, பகல் பாராமல் கரோனா நோய் தொற்று பாதிப்பு உள்ள நபர்களுக்கு தீவிர சிகிச்சை, பாதுகாப்பு, கண்காணிப்பு மேற்கொண்டார்கள்.
மீதமுள்ள 14 நபர்களில் 2 நபர்கள் பூரண குணமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வாழ்த்தி அனுப்பினர். மருத்துவமனையில் மொத்தம் 12 நபர்கள் கரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை முடிந்து திரும்பியவர்கள் அனைவரும் அடுத்த 14 நாள்களுக்கு அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். இவர்கள் பின்பற்ற வேண்டிய மருத்துவ நெறிமுறைகள் குறித்து மருத்தவர்கள் தெளிவாக எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வில் மாநகர நல அலுவலர் மரு.பார்த்திபன், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் உள்பட மருந்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா பீதி: துபாய்க்கே திருப்பி அனுப்பப்பட்ட இந்தியரின் சடலம்!