கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் , கரோனோ நிவாரணம் 1000 ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் அது போதாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
அனைத்து விதமான தொழில்களும் முடக்கப்பட்ட நிலையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள நிவாரணம் ஆயிரம் ரூபாய் போதுமானதாக இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10,000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மோகன் தலைமையில் அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10,000 ரூபாய் வழங்கக் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுதொடர்பாக மோகன் கூறுகையில், "சேலத்தில் உள்ள 40 வகையான சிறு மற்றும் குறு தொழில்கள் முழுவதுமாக தடை உத்தரவால் முடங்கி போயுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையில் நாட்களை தள்ளி வருகின்றனர். குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் சேலத்தில் உள்ள 40 வகையான சிறு, குறு தொழிலாளர்களையும் கணக்கில் எடுத்து அவர்களுக்கு நிவாரண நிதி வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
தற்போது வழங்கியுள்ள 1,000 ரூபாய் போதாத நிலை உள்ளது. எனவே, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 10,000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தீரத்துடன் எதிர்நீச்சல் போட்டு கரோனாவிலிருந்து மீண்ட இளைஞர்!