சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்வது குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஆட்சியர் ராமன் பேசுகையில், "தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக எடுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் நோய்கண்காணிப்புப் பணிகள், தூய்மைப்படுத்தும் பணிகள் உள்ளிட்டவைகளை போர்க்கால அடிப்படையில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செய்ய வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப்பகுதிகளிலும் செயல்படுத்தவேண்டும்.
நன்றாக கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வது. குறைந்தது 30 வினாடிகள் கைகளை சுத்தமாக கழுவுவது. சளி, இருமல், காய்ச்சலிருந்தால் அரசு மருத்துவரை அணுகுவது. சளி, இருமல், காய்ச்சலிருப்பவர்கள் மக்கள் அதிகம்கூடும் இடங்களுக்கு செல்லாமல் இருப்பது. கொரோனா வைரஸ் தொற்று குறித்து தவறான வதந்திகளை பரப்பாமலிருப்பது உள்ளிட்ட செய்திகளை மக்களிடம் சேர்க்கவேண்டும் எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கூடுதல் இயக்குநர்/ திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அருள்ஜோதி அரசன், சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.திவாகர், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை முதல்வர் ஆர்.பாலாஜிநாதன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜெ.நிர்மல்சன், மாநகர் நல அலுவலர் மரு.பார்த்திபன், உணவு பாதுகாப்பு அலுவலர் மரு.கதிரவன், இணை இயக்குநர் (மருத்துவம்) சத்தியா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருகோவிநாத், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கே.கனகராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: ஆட்சியர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி