சேலத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் திறப்பு, மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக நீர் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 10ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து சேலம் வந்தார் .
பின்னர் அடுத்த நாள் காலை சேலம் ஐந்துரோடு பகுதியில், புதிதாக கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஜூலை 12ஆம் தேதி காலை மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்குப் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டார்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் படம் பிடிப்பதற்காக தமிழ்நாடு அரசின் திரைப்படப் பிரிவு (Film Division) ஒளிப்பதிவாளர், தனது குழுவினருடன் சென்னையில் இருந்து சேலம் வந்து தங்கி, நிகழ்வுகளைப் படம் பிடித்தார்.
இந்நிலையில் ஜூலை 13ஆம் தேதி, அவருக்கு நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா பாதித்து இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதேபோல் சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கைது ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனடியாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தை கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தினர் .
மேலும், அங்கிருந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் என 13 பேரையும் தனிமைப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு யாரும் நுழைய வேண்டாம் என்றும் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் நேற்று (ஜூன் 13) ஒரே நாளில் ஆறு பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் 273 பேர் குணமடைந்துள்ளதாகவும், 35 பேர் தனி வார்டில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர்.