சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டிருந்த நபர்கள், ஒவ்வொருவராக குணமடைந்து தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிய நிலையில், சேலம் மாவட்டம் கரோனா நோய் பாதித்தவர்கள் இல்லாத மாவட்டமாக மாறி வந்தது.
சில நாட்களுக்கு முன்பு வரை 35 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பபட்டு சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிய நிலையில், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த நபர்களுக்கு கரோனோ வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து 22 பேருக்கு தற்போது கரோனோ வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் நபர்களில் நான்கு பேர் தங்களது செல்போனில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து சிக்கன் பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆகியவற்றை வாங்கி கரோனா வார்டில் வைத்தே சாப்பிட்டுள்ளனர்.
இந்த தகவல் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “ஆன்லைனில் நான்கு கரோனா நோயாளிகள், பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆகியவற்றை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டதாகத் தெரியவந்தது.
பின்னர் அந்த தகவல் தெரிந்ததும் அவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்று யாரும் இனி நடந்துகொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.