சேலம் மாவட்டத்தில் கரோனோ வைரஸ் நோய் தொற்று தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாள்தோறும் 400க்கு மேல் அதிகரித்து, தற்போது சேலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருவாய்த் துறையில் பணியாற்றும் ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறுவதால், இன்று முதல் 3 நாட்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவித்துள்ளார். இதனையடுத்து வரும் திங்கட்கிழமை முதல் வழக்கம்போல் ஆட்சியர் அலுவலகம் செயல்படும் என்று அலுவலக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.