கரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றது. இதற்கிடையில் வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அத்தியாவசிய தேவையான காய்கறிகள், உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கிருமி நாசினி சுரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
16 அடி நீளம் உள்ள அச்சுரங்கப் பாதையில் மக்கள் நுழைந்தால், ஆட்டோமேட்டிக் சென்சார் மூலம் இயங்கி, தலை முதல் கால் வரை கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் உடல் முழுவதும் கிருமி நாசினி மூலம் எந்த ஒரு நோய் தொற்றும் ஏற்படாமல் பாதுகாக்கும் வண்ணம் சுரங்கப் பாதை பயன்படுகிறது.
இதனை இன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும் இந்தக் கிருமி நாசினி சுரங்கப்பாதை தொடர்ந்து 8 மணி நேரம் இயங்கும் வகையில் மருந்துகள் நிறுவப்பட்டுள்ளது. இக்கிருமி நாசினி சுரங்கப்பாதை, சேலம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: உழவர் சந்தைகளாக மாறும் பேருந்து நிலையங்கள்!