சேலம்: சேலத்தில் காங்கிரஸ் கட்சி பல பிரிவுகளாக பிரிந்து இருக்கிறது. இந்த நிலையில், அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பொன்னம்மாப்பேட்டை பகுதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி வேலுச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டம் குறித்து சேலம் மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. மேடை அமைத்து பல கிலோ மீட்டர் தொலைவிற்கு காங்கிரஸ் கொடிகள் கட்டப்பட்டு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வந்தன.
இந்தச் சூழலில் இந்த பொதுக்கூட்டத்திற்கு வர இயலாது என திருச்சி வேலுச்சாமி ஏற்பாட்டாளர்களிடம் கூறியுள்ளார். இதனால் பொதுக்கூட்டம் நிறுத்தப்பட்டது. திருச்சி வேலுச்சாமி வர மறுத்ததற்கு காரணம், சேலம் மாநகர மாவட்டத் தலைவராக உள்ள பாஸ்கர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கே.வீ. தங்கபாலுவும்தான் என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். உட்கட்சிப் பூசல் காரணமாகவே இந்தச் செயலை அவர்கள் செய்துள்ளதாவும் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாக காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகரன் பேசும்போது, "பொதுக்கூட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்த பிறகு, திருச்சி வேலுச்சாமி கூட்டத்திற்கு வர முடியாது என்று கூறிவிட்டார். ஏன் என்று கேட்டபோது, சேலத்தில் உள்ள பெரிய தலைவர் ஒருவர், சேலம் கூட்டத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்று என்னை தடுத்துவிட்டார். அதனால் என்னால் வர முடியாது என்றார். இதுதான் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியா? இது என்னைப் போல தொண்டனுக்கு வேதனையாக இருக்கிறது.
எங்களை வாழ வைக்க வேண்டாம், தயவு செய்து எங்களை அழித்துவிடாதீர்கள். நாங்கள் அழிய மாட்டோம், ராகுல் காந்திக்குப் பின்னால் நிற்போம். இந்தக் கூட்டத்தை மட்டும்தான் உங்களால் நிறுத்த முடியும், எதிர்காலத்தில் இதை விட மிகப்பெரிய கூட்டத்தை நடத்துவேன்" என்று கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலுவும், மாவட்டத் தலைவரும் சேர்ந்து கொண்டு கட்சியை அழிவுப் பாதையை நோக்கிக் கொண்டு செல்கிறார்கள் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.