உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி சர்வதேச தர தினம் (World Quality Day) கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், சர்வதேச தர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூய்மைப் பணிகளில் ஈடுபடுமாறு தமிழ்நாடு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச தர தினத்தையொட்டி, மெகா தூய்மைப்படுத்தும் பணி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தூய்மைப்படுத்தும் பணிகளைத் தொடங்கிவைத்தார்.
இதையடுத்து, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ - மாணவியர், துப்புரவு ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது, அரசு மருத்துவமனை வளாகத்தின் அனைத்து இடங்களிலும் 10 குழுக்களாக பிரிந்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தேசிய தரச் சான்றிதழ் பெறுவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளதாக பாலாஜி நாதன் தெரிவித்தார்.
![cleaning work in government hospital](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5059419_slm-img.jpg)
மேலும் இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் தனபால், சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் நிர்மல்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தியாகராஜ பாகவதர் 60ஆம் ஆண்டு நினைவு தினம்