சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் ரோகிணிக்கு சால்வை அணிவிக்கப்பட்டு விவசாயிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
அதன் பின்னர் பேசிய ரோகிணி, சேலம் மாவட்டத்திற்கு ஆட்சியராக பொறுப்பேற்று நடத்தப்பட்ட முதல் கூட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தான். அதேபோல இன்று பணிமாறுதல் பெற்ற பிறகு ஆட்சியர் என்ற முறையில் நடத்தப்படும் இறுதிக் கூட்டமும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தான். நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த பெண் என்பதால் விவசாயிகளின் மீது எப்போதும் அக்கறையுடன் இருப்பேன். பணியிட மாறுதல் உத்தரவை பெற்றதும் ஒரு நாள் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று இருந்தாலும், என் மீது பாசத்துடன் இருக்கும் விவசாயிகளை பார்க்க வேண்டும் என்பதால் இன்று இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன். எத்தனையோ கூட்டங்களில் எனக்கு சால்வை பரிசுகள் வழங்கப்பட்டாலும் இன்று விவசாயிகளிடமிருந்து பெற்ற இந்த சால்வையை தான் மிகப் பெருமையாக கருதுகிறேன் என்று கண்ணீர் விட்டு நெகிழ்ந்தார்.