இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் கூறும்போது, 'தாட்கோ மூலமாக தேசியப் பட்டியல் இனத்தோர் நிதி மேம்பாட்டுக் கழகத் திட்டத்தின் கீழ், முழு நேரத் தொழில் முறை, தொழில் நுட்பப் படிப்புகளுக்கு இந்திய நாட்டுக்குள் படிப்பதற்கு 10 லட்சம் ரூபாய் வரையும், வெளிநாட்டில் சென்று படிப்பதற்கு 20 லட்சம் ரூபாய் வரையும் கல்விக்கடன் பெற ஆதி திராவிடர் இனத்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாள்களில் நேரிடையாகவும் பெற்றுக்கொள்ளலாம். இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், குடும்ப அட்டை, சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் புகைப்படம் இரண்டு, சான்றளிப்பு ஆவணம், கல்விக் கட்டணம், கல்வித் தகுதி சான்றிதழ், ஆதார் அட்டை, சாதிச் சான்று, மூன்று லட்சம் ரூபாய் மிகாமல் வருமானம் இருப்பதற்கான சான்று, கல்லூரியில் ஏற்கெனவே செலுத்தப்பட்ட தொகையின் ரசீது, மதிப்பெண் சான்றிதழ், பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு), விசா (வெளிநாட்டில் சென்று படிப்பதற்கு மட்டும்) ஆகிய ஆவணங்களை விண்ணப்பங்களுடன் சேர்ந்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவங்களில் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகளை சரியாக பின்பற்றும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதில், 1. மனுதாரரின் மனுவில், கடனாகக் கோரப்படும் மொத்த நிதியை ஆண்டு வாரியாகவும், இனங்கள் வாரியாகவும் தனித்தனியே பட்டியலிட்டுக் காட்ட வேண்டும். 2. கடன் கோரும் மொத்த தொகையில் 12.5 விழுக்காடு வைப்புத் தொகையாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மனுதாரர் பெயரில் எடுத்து, அதனை தாட்கோவிற்குத் தர வேண்டும். 3. கடனுதவி கோரும் கடன் தொகைக்கு எல்ஐசி போன்ற பெயர் பெற்ற காப்பீட்டு நிறுவனங்களில் மனுதாரரின் பெயரில் காப்பீடு செய்து, அந்தப் பத்திரத்தில் மேலாண் இயக்குநர், தாட்கோவின் பெயர் சேர்க்க வேண்டும்.
அரசுப் பணியில் உள்ளவர் பிணை கையொப்பமிட வேண்டும். பருவக்கடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரரால் தனது படிப்பிற்கு ஏற்கெனவே செலுத்தப்பட்ட தொகைக்கு கடன் வழங்கப்படமாட்டாது.
மேலும், இத்திட்டம் பற்றிய விவரங்களை https://nsfdc.nic.in/en/educational-loan-scheme என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பார்தி இன்ஃப்ராடெல், இந்துஸ் டவர்ஸ் இணைப்புக்கு ஒப்புதல்