மூன்றுநாள் பயணமாக சேலம் வந்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக சேலம் புறநகர் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எந்தவொரு சிறுபான்மையினருக்கும் பாதிப்பு ஏற்படாது.
அச்சட்டம் குறித்து இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் அச்சப்படத் தேவையில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பரப்பிவரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது. இதனை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும். தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளது. அதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்பிவருகிறார்.
தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது. அரசு தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவருவதால் தேசிய விருதுகளைப் பெற்றுவருகிறது. இதுவே அரசு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதற்கு சிறந்த உதாரணம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிபெற்று மாவட்ட ஊராட்சிக் குழு, ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கும், துணைத் தலைவர் பதவிக்கும், கவுன்சிலர் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக பிரதிநிதிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.
இதையும் படிங்க: ஆளுநருக்கு முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து