சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, 'தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களிடம் இருந்து 9 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. அவற்றில் 5 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 4 லட்சம் மனுக்களை நிராகரித்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். நிராகரிக்கப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து மக்களுக்கு தேவையான தீர்வுகளை செய்து தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முதியவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களின் சொத்து மதிப்பு 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் இருந்தால் அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படும் என அலுவலர்கள் என்னிடம் தெரிவித்தனர். அதனால் முதியோர் உதவித்தொகை கேட்டு பெறுவோர் சொத்து மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் வரையில் இருந்தாலும் அவர்களுக்கு உதவித் தொகை வழங்கிட வேண்டும் என்று நான் உத்தரவிட்டுள்ளேன். அதன்படி பணிகள் நடந்து வருகிறது.
நீர் மேலாண்மை திட்டம் தமிழ்நாடு முழுக்க மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எங்களின் கனவு திட்டமான காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை நிச்சயம் செயல்படுத்துவோம். அதேபோல் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை இணைக்க மத்திய அரசு எங்களின் கோரிக்கையை ஏற்று பரிசீலனை செய்துவருகிறது. விரைவில் அந்தத் திட்டமும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தால் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்கள் நீண்டகாலத்திற்கு பயனடையும். காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் வரும் ஜூலை மாதத்திற்குள் தொடங்கி வைக்கப்படும்' என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித் துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட 21 துறைகளின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், 157 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் பயனாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதில், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய்த் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, சங்ககிரி, ஆத்தூர், ஏற்காடு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிகளின் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க... அமெரிக்க பயணத்தில் கோட்டில் கலக்கும் ஓபிஎஸ்!