தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு சேலம் வந்தார். இன்று தாரமங்கலத்தில் நடைபெறும் விழாவில் ரூ.24.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தாரமங்கலம் புதிய புறவழிச்சாலை, இரண்டு மேம்பாலங்களையும் சேர்த்து மொத்தம் ரூ.29.35 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை பழனிசாமி திறந்துவைத்து பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து, காலை 11 மணிக்கு எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விழாவில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்குதல், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் அளித்தல், ரூ.39.75 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டல் உள்ளிட்ட பணிகளை முடித்துவிட்டு மக்கள் மத்தியில் பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் எதிரே உள்ள மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் மாநில அளவிலான வங்கிக் கடன் வழங்கும் விழாவில் பங்கேற்று பயனாளர்களுக்கு கடன்களை வழங்கி உரையாற்றுகிறார்.
இவ்விழாவிற்குப் பிறகு கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் நாளை மாலை கார் மூலம் கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.