சேலம் : தமிழ்நாட்டில் முதல்முறையாக மின்சாரக் கார்களுக்கு சார்ஜ் ஏற்றும் சார்ஜிங் நிலையம் சங்ககிரி பைபாஸில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மின்சார காரை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக அந்நகரத்தின் முக்கிய இடங்களில் மின்சார கார்கள் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் மின்சார கார்களின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழ்நாடு அரசு வரிச் சலுகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டில் மின்சார கார்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதேபோல, மின்சார காரை பயன்படுத்துபவர்களுக்கு உதவும் வகையில் பெட்ரோல் பங்குக்களை போல மின் சார்ஜிங் நிலையம் அமைக்க பணிகள் நடைபெற்றுவருகிறது.
முதற்கட்டமாக சேலம் மாவட்டம் சங்ககிரி பைபாஸ் பகுதியில் இன்று (ஜன.12) தமிழ்நாட்டின் முதல் மின்சார வாகன சார்ஜிங் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. அதனை சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா திறந்துவைத்தார்.
இது பற்றி மின்சார சார்ஜிங் நிறுவன ஊழியர்கள் கூறுகையில், “இந்தியாவில் அதிகமாக பெட்ரோல் டீசலுக்கு செலவு செய்யும் நிலை இனி வரும் காலங்களில் இருக்காது. அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார கார்களின் பயன்பாடு அதிகரிக்கும். அதனை எதிர்கொள்ளும் வகையில், மின்சார கார்களுக்கு சார்ஜ் ஏற்றும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்றுவருகின்றன. அனைத்து இடங்களிலும் கார் சார்ஜர் செய்யும் நிலையங்கள் பரவலாக உருவாக்கப்படும்
ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 350 - 400 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்பதால் புதிய தொழிற்நுட்பமான மின்சார கார்கள் பயணிகளின் செலவை குறைக்கும். மின்சார கார்களை பயன்படுத்தினால் ஒரு கிலோ மீட்டருக்கு அதிகபட்சமாக இரண்டு ரூபாய் மட்டுமே செலவாகும். எனவே, மன நிம்மதியுடன் வாகனத்தை இயக்க முடிகிறது. அதுமட்டுமில்லாமல், சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படாமல் முற்றிலும் தடுக்கும். பசுமைப் பயணமாக இனிவரும் நாள்களில் அமையும்” என்றனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 16 கார் சார்ஜிங் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், மின்சார கார் சார்ஜர் நிலையத்தின் மேலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க : பரமத்தியில் வாழைத்தார் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி