சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் சஞ்சய் பிரகாஷ். இவரும் எருமாபாளையத்தை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி என்பவரும் விநாயகம்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். அப்போது இருவரும் யூடியூபை பார்த்து நாட்டு துப்பாக்கிகளை தயாரித்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை முதலில் தீவட்டிப்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், பின்னர் தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து என்ஐஏ அலுவலர்கள், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் பிரகாஷ் மற்றும் நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.
பின்னர் மீண்டும் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று (அக் 7) அதிகாலை 5 மணியளவில் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த ஐந்து அலுவலர்கள், விநாயகம்பட்டியில் உள்ள சஞ்சய் பிரகாஷ் மற்றும் நவீன் சக்கரவர்த்தி தங்கி இருந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டிலிருந்த புத்தகங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினர். வீட்டை வாடகைக்கு விட்ட சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரிடம் என்ஐஏ அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவகங்கையில் இளைஞர் வீட்டில் என்ஐஏ சோதனை