கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் இருந்து சேலத்திற்கு ‘பார்வதி’ என்ற தனியார் பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்றிரவு 8 மணி அளவில் வந்துகொண்டிருந்தது.
இப்பேருந்து அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரிக்கு வழிவிட திரும்புகையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பெண் ஒருவருக்கு மட்டுமே காயம் ஏற்பட்ட நிலையில், பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காரிப்பட்டி போலீசார், பேருந்தை அப்புறப்படுத்திவிட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சேலத்தில் இருந்த தருமபுரி வழியே சென்றால் இரண்டு டோல்கேட்களில் பணம் செலுத்தவேண்டியிருப்பதால் மணல், சரக்கு லாரிகள் இந்த சாலையையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். இதனால் அதிகளவிலான விபத்துகள் ஏற்படுவதாகவும், அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.