சேலம்: தமிழ்நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில் திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன், சதீஷ், சபரிராஜன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அக்டோபர் 21ஆம் தேதி பாலியல் வழக்கு குற்றவாளிகள் ஐவர், கோவை மகளிர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் சேலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது குற்றவாளிகள் வந்த வேன் திடீரென கோவை விமான நிலையம் அருகே நிறுத்தப்பட்டது.
காவலர்கள் பணியிடை நீக்கம்
பின்னர் அங்கு ஏற்கனவே தயாராக நின்றிருந்த குற்றவாளிகளின் உறவினர்கள், அவர்களுடன் நலம் விசாரித்து உரையாடினர். சட்டத்தை மீறிய இந்த செயல் தொடர்பான காணொலி, நமது ஈடிவி பாரத்தின் மூலமாக வெளியாகி சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்ரமணியம், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்திக் ஆகிய 7 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் உறவினர்களிடம் பேச அனுமதித்த விவகாரத்தில், காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
பிரியாணி - பிரியாவிடை
முதலில் வாகனம் நின்றதும் குற்றவாளிகளின் உறவினர்கள், காவல்துறையினருக்கும் சேர்த்து மட்டன் பிரியாணியை சாப்பிட கொடுத்துள்ளனர். இதற்கு ஆசைப்பட்ட காவல்துறையினரே குற்றவாளிகளின் உறவினர்களை ஏழு நிமிடங்களுக்கு மேல் பேச அனுமதித்துள்ளனர்.
இதன் காரணமாகவே காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா உத்தரவு பிறப்பித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரியாணிக்கு ஆசைப்பட்டு பிரியாவிடையளிக்க அனுமதியளித்த காவலர்களின் செயல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாணவி தூக்கிட்டு தற்கொலை - மொபைலில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் நேர்ந்த சோகம்