சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடைபெற்றன. இதில் 350-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து இலங்கையில் பல்வேறு பாதுகாப்பு பணிகள் மற்றும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இலங்கையைப்போலவே தமிழகத்திலும் வெடிகுண்டு சம்பவங்கள் நடைபெறப் போவதாகவும், இந்த வெடிகுண்டு சம்பவத்தை அரங்கேற்ற ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் தங்கியிருப்பதாகவும் பெயர் குறிப்பிடாமல் ஒருவர், கர்நாடக மாநிலம் பெங்களூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பெங்களூர் காவல் நிலையத்திலிருந்து தமிழகத்திற்கு இன்று தகவல் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சேலத்திலும் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு பொருட்கள் உள்ளதா என்பது குறித்து சோதனை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் குழு, இரண்டு மோப்ப நாய்களுடன் ரயில்வே மற்றும் மாநகர காவல்துறையினருடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். ரயில் நிலையத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், ரயில்களிலும் சோதனை செய்யப்பட்டன.
மேலும், ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள தங்கும் விடுதிகள் மற்றும் பொது இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் அதிக அளவில் காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.