வருகின்ற மே மாதம் நடைபெற உள்ள 2021 சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேசிய கட்சிகள் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது முனைப்புடன் செயல்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக இளைஞரணி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பின் இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக ஆட்சியின் பல்வேறு சாதனைகளை விளக்கி கூறினார். தமிழ்நாடு சித்தாந்தங்களை பெருமையுடன் பேசினார். மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு என்ற வகையில் பெரும்பான்மையில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் திமுக மற்றும் காங்கிரஸ் தமிழ் மக்களுக்கு எதிரான கட்சி, இவர்களின் கூட்டணி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் எதிரானது. பிரதமர் மோடி ஆட்சியில்தான் தமிழ்நாடு மீனவர்கள் 1,600 பேர் விடுதலை செய்யப்பட்டு, 3 படகுகள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கை அகதிகள் அமைதியாகவும், சம உரிமையுடனும் வாழ்வதற்கு பாஜக உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.
இம்மாநாட்டில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன், இளைஞர் அணி தலைவர் வினோத் பி. செல்வம், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நேரலை : பாஜக இளைஞரணி மாநாட்டில் ராஜ்நாத் சிங் உரை!