மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் அண்மையில் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்து காணொலி வெளியிட்டிருந்தார்.
இதற்குப் பொதுமக்கள், பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், திருமாவளவனைக் கைதுசெய்ய வலியுறுத்தி பாஜக, இந்து முன்னணியினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மாவட்ட மகளிரணித் தலைவர் சுமதிஸ்ரீ தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், திருமாவளவனைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
போராட்டம் குறித்து சுமதிஸ்ரீ கூறுகையில், "இந்து பெண்களை திருமாவளவன் இழிவுப்படுத்திப் பேசியிருக்கிறார். அவரை, கைதுசெய்யும் வரை பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் போராட்டம் நடத்துவோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தடைசெய்ய வேண்டும். திருமாவளவனை எம்.பி.யை பதவியிலிருந்து நீக்க வேண்டும்" என்றார்.