சேலம் மாவட்ட பாமக பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜி.கே. மணி, “தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதில் பாமக உறுதியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் மதுவிலக்குக் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம். திரெளபதி திரைப்படம் போன்று இன்னும் பல்வேறு திரைப்படங்கள் வெளியாக வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்ட விவகாரத்தை திரைப்படமாக எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். அதைப் பார்த்த பாமக முழு மனதுடன் வரவேற்கிறது.
ஓமலூரில், பங்குனி உத்திர விழா பாமக சார்பில் மிகப்பெரும் விழாவாக நடைபெற இருக்கிறது. இந்த பங்குனி உத்திரத் திருவிழாவில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நீர் மேலாண்மைத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் வறட்சியான பகுதிகளில் உள்ள ஏரிகளையும் மேட்டூர் உபரி நீர் கொண்டு நிரப்ப வேண்டும். சரபங்கா நதி வடி நிலத்தில் நீர் நிறைக்க திட்டம் செயல்படுத்துவது போல, வசிஷ்ட நதி பகுதிகளிலும் மேட்டூர் அணை உபரி நீரை நிறைத்து சேலம் மாவட்டத்தின் கிழக்குப்பகுதிகளிலும் வறண்டு கிடக்கும் ஏரிகளை நிரப்ப வேண்டும். அதற்கான திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனே செயல்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பாமக துணைத் தலைவர் இரா.அருள், சேலம் மாவட்ட பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க : பேராசிரியர்களைப் பணிநீக்கம் செய்ய அண்ணா பல்கலை.க்கு இடைக்காலத் தடை