தமிழ்நாட்டில் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களில் பரோட்டாவுக்கு தனி இடம் உண்டு. மைதா மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் எண்ணெய் பரோட்டா, முட்டை வீச்சு பரோட்டா, கொத்து பரோட்டா உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த ஏத்தாப்பூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் உணவகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரோட்டா சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பரோட்டா பிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு இவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொண்டனர். போட்டியின் விதிகளின்படி பத்து நிமிடத்திற்குள் 15 பரோட்டா சாப்பிட வேண்டும்.
இப்போட்டியில் தோல்வி அடைந்தால் சாப்பிட்ட பரோட்டாவுக்கு பணம் வழங்க வேண்டும். மேலும் இப்போட்டியில் நிகழும் எவ்வித சம்பவங்களுக்கும் உணவக நிர்வாகம் பொறுப்பேற்காது. அப்படி சாப்பிட்டு வெற்றி பெற்றால் பொங்கல் பரிசு வழங்கப்படும் என உணவக உரிமையாளர் அறிவித்தார்.
பரோட்டா சாப்பிடும் போட்டி குறித்த நேரத்தில் சரியாக தொடங்கியது. போட்டியில் கலந்துகொண்ட பரோட்டா பிரியர்கள் கையில் மொபைல் போன் வைத்துக்கொண்டு நேரம் கடந்து செல்வதை பார்த்துக்கொண்டே பரோட்டாவை சாப்பிட்டனர். நிஜத்தில் ஒரு 'வெண்ணிலா கபடி குழு' திரைப்பட காட்சி அரங்கேறியது.
போட்டியின் முடிவில் 14 பரோட்டாக்களை உண்டு முதல் பரிசை இளங்கோ என்பவர் வென்றார். 13 பரோட்டாக்களை உண்டு இரண்டாம் பரிசை ஶ்ரீதர் என்பவர் வென்றார். இந்த வித்தியாசமான பரோட்டா உண்ணும் போட்டியை ஆட்டோ மணி, ஆட்டோ செல்வம் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு பணத்தில் ஆன்லைன் ரம்மி - தோற்றதால் கல்லூரி மாணவர் தற்கொலை!