சேலம் டவுன் பகுதியில் உள்ளது, சின்னக் கடை வீதி. இங்கு வாழைப்பழ மண்டிகள், வாழைப்பழ விற்பனைக் கடைகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் இங்கு வந்து பழங்கள் வாங்கி செல்கிறார்கள். இங்கு ரசாயனம் தெளித்து பழங்களை பழுக்க வைத்து, விற்பனை செய்வதாக உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்குத் தகவல் வந்தது.
இதனையடுத்து, உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அலுவலர்கள் இளங்கோ, சுருளி, சிவலிங்கம் உள்ளிட்டோர் சின்னக்கடை வீதி பகுதி முழுவதும் சோதனை நடத்தினர். சோதனையில், 'எர்த்தோபார்ம்' என்ற விவசாயிகள் பயன்படுத்தும் தெளிப்பான்களைப் பயன்படுத்தி, வாழைப் பழங்களை பழுக்க வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஒன்றரை டன் வாழைப்பழங்கள், எர்த்தோபார்ம் மருந்துகள், தெளிப்பான் கருவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஐந்து வாழைப்பழ மண்டி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர் கூறும்போது, ' இயற்கையாக பழுக்க இரண்டு, மூன்று நாட்கள் ஆகும் நிலையில், 'எர்த்தோபார்ம்' என்ற விவசாயிகள் பயன்படுத்தும் கெமிக்கலைப் பயன்படுத்தி, வாழைப்பழங்களை சுமார் 10 மணி நேரத்திற்குள் பழுக்க வைக்கிறார்கள். இதனால் அல்சர், அலர்ஜி ஏற்படும். தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது' எனத் தெரிவித்தார்.