பெண்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு காவல் துறை சார்பில் காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஸ்மார்ட் போன்களில் தரவிறக்கம் செய்துகொண்டு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை காவல் துறையினருக்கு இருந்த இடத்திலிருந்தே புகார் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அளவில் கல்லூரி, வேலைக்கு செல்லும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள காவலன் செயலி குறித்து காவல் துறையினர் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சேலம் மாநகர காவல் துறையின் சார்பில் விஜயராகவாச்சாரியார் அரங்கில் அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கான காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு காவலன் செயலி குறித்த செயல்பாடுகளை செயல் விளக்கங்கள் மூலம் அறிந்து கொண்டனர்.
மாணவிகளிடம் காவலன் செயலி குறித்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் விளக்கமாக எடுத்துரைத்தார் . இந்த நிகழ்வில் சேலம் காவல் துணை ஆணையாளர் தங்கதுரை, காவல் துணை ஆணையர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உங்களிடம் காவலன் செயலி உள்ளதா?' - விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர்கள்