சேலம் பழைய பேருந்து நிலையம் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ஈரடுக்குப் பேருந்து நிலையமாக மாற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் அண்ணா சிலை அருகே இருந்த ஆட்டோ நிறுத்தம் நேரு கலையரங்கம் எதிரே மாற்றம்செய்யப்பட்டது.
கடந்த ஓராண்டாக இப்பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு, ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளை ஏற்றிச் சென்றுவந்தனர். தற்போது மாநகராட்சி நிர்வாகம் பழைய பேருந்து நிலையத்திற்கு வரும் வழிகள் அனைத்தையும் அடைத்துள்ளனர்.
இதனால் பழைய பேருந்து நிலையத்திற்குப் பயணிகளை ஏற்றிச் செல்ல முடியாமல் அவதிப்படுவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சேலம் மாநகரக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இது தொடர்பாக மாநகராட்சி அலுவலரிடம் பேசுவதாகக் காவல் துறையினர் உறுதியளித்த பின்பு கலைந்துசென்றனர். இது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறும்போது, சேலத்தில் குறிப்பாகச் சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, கிச்சிப்பாளையம், கருங்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கிவருகின்றன.
எனவே தங்களுக்கு ஆட்டோ நிறுத்துவதற்கு மாற்று இடம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் வங்கிகளில் கடன் வாங்கி ஆட்டோவை இயக்கிவரும் தங்களுக்கு, முறையான நிறுத்தம் இல்லாதது பெரும் பாதிப்பாக உள்ளது எனவும் வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நீர்தேக்கத் தொட்டியை பயன்பாட்டிற்குக் கொண்டுவர பல்லாவரம் மக்கள் கோரிக்கை